Wed, Aug 05, 2026 07:01 AM

பராமரிப்பு இல்லா அரசு பேருந்து... பள்ளி மாணவர் உயிர் தப்பிய சம்பவம்!

Posted by admin on 08-07-2026


பராமரிப்பு இல்லா அரசு பேருந்து... பள்ளி மாணவர் உயிர் தப்பிய சம்பவம்!

ஓடும் அரசு பேருந்தில் தரைப்பலகை விலகி ஆபத்து: பள்ளி மாணவரை பயணிகள் காப்பாற்றினர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் இயக்கப்படும் அரசு டவுன் பேருந்துகளின் பராமரிப்பு குறைபாடு மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  திருப்புவனம் வழியாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்தில், தரைப்பகுதியில் இருந்த பலகை விலகியதால் பள்ளி மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மதுரை மற்றும் திருப்புவனம் பகுதிகளுக்கு தினசரி 44 அரசு டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள், மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் இந்தப் பேருந்துகளை நம்பியே பயணம் செய்து வருகின்றனர். ஆனால், உரிய பராமரிப்பின்றி இயக்கப்படுவதால் அடிக்கடி பழுது மற்றும் விபத்து அபாயங்கள் ஏற்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

 எஸ்.வாகைகுளம் கிராமத்திலிருந்து திருப்புவனம் வழியாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் (TN 58 N 2196), நடுப்பகுதியில் சரிவர மூடப்படாத தரைப்பலகையை மிதித்த பள்ளி மாணவர் ஒருவர் கீழே உள்ள ஓட்டையில் விழும் நிலை ஏற்பட்டது. அருகில் இருந்த பயணிகள் உடனடியாக சுதாரித்து மாணவரை பிடித்து காப்பாற்றினர்.

ஒரு நபர் உள்ளே விழும் அளவுக்கு பெரிய ஓட்டை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக பயணிகள் தெரிவித்தனர். மேலும், சம்பவத்திற்குப் பிறகும் அந்த பலகையை சரிசெய்யாமல் பேருந்தை மதுரை வரை இயக்கியதாகவும், இதுகுறித்து கேட்ட பயணிகளிடம் பேருந்து ஊழியர்கள் அலட்சியமாக பதிலளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழுதடைந்த அரசு பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Share: 19 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.